search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிவாசல் நிர்வாகி வீட்டில் கொள்ளை"

    கோட்டக்குப்பத்தில் பள்ளி வாசல் நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மீலாது நகரை சேர்ந்தவர் அமீர் அம்ஜா (வயது 65).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் முகமது ஷேக் (35). இவர் வீட்டின் மாடியில் மனைவி மற்றும் குழந்தைகளுடனும், அமீர் அம்ஜா வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு முகமது ஷேக் வீட்டின் மாடியில் ஒரு அறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். அதிகாலை 3.45 மணிக்கு ரம்ஜான் நோன்பையொட்டி சிறப்பு தொழுகைக்காக முகமது ஷேக் எழுந்தார்.

    அப்போது மற்றொரு அறை கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 24 பவுன் நகையில் 2 பவுன் வளையலை மட்டுமே வைத்து விட்டு 22 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.8 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து முகமது ஷேக் உடனடியாக கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் வீட்டின் பால்கனி வழியே புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 2 பவுன் வளையல் கவரிங் நகையாக இருக்கலாம் என கருதி அவர்கள் பீரோவிலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்த அமீர் என்பவரின் தோட்டத்தில் முகமது ஷேக் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பவுன் நெக்லஸ் கிடந்தது. அதனை அமீர் எடுத்து முகமது ஷேக்கிடம் ஒப்படைத்தார்.

    கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது 3 பவுன் நெக்லஸ் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது போக கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×